Monday, July 4, 2022

காதலித்து வாழத் துணை தேவையில்லை ❤️

தனிமையைத் தழுவுங்கள், தனிமையில் தழைத்திடுங்கள்.

காலத்தின் வேகத்திலும், கனவுகளின் தொய்வுகளிலும் அரித்துப்போன செல்களில் புத்துயிர் பாய்ச்சுங்கள்.
கடிகார முள்ளினைப் பிடித்துத் தொங்கி ஊஞ்சலாடுங்கள், கட்டற்று சுற்றித் திரியட்டும் அவை.
காலணியற்றப் பாதங்களைத் தார் ரோடுகளுக்குள்ளும், ஏரிக்கரை புதருக்கும் அழைத்துச் செல்லுங்கள்.
கலைந்த தலையும், ஒப்பனை இல்லா முகமும், தேர்ந்த பெண்ணுடலும், பார்வைகளையும் புருவங்களையும் உயர்த்தினாலும், காணாது அந்நொடி வாழப் பழகுங்கள்.
கண் கோர்க்க நேர்ந்தால் புன்னகைப் பூத்து காதல் வயப்படுத்துங்கள்.
கண்கள் மூடி செவி வழி உணர்வுகளை அசைபோடுங்கள்.
உள்ளம் அப்பொழுது வகுத்துக்கொண்டுச் செல்லும் பாதையினைக் கண்டு வியந்து போகத் தவறாதீர்கள்.
அது மட்டுமே அறைகூவல் என உணர 80 வயதைக் கிட்டலாம். ஆகையால், கைக்கெட்டும் ஞானத்தை அள்ளிப் பருகத் தவறாதீர்கள்.
தாளின் மீது பென்சில் ஓயாது கூச்சலிடட்டும்,
எரிச்சலூட்டும் அலைபேசியின் சத்தத்தை மூடி மறைக்கட்டும் அவை.
ஒளித்திரைகளை மூடி வையுங்கள், ஏன் ஒளியையே மூடி மறைத்து இருளுக்குள் மூழ்குங்கள்.
வான்முட்டப் பறக்கத் தோன்றினாலும்,
கோபுரங்களும், பளபளக்கும் சிமெண்ட் சிறைகளின் மேலும் பறக்காதீர்கள்.
எங்கு அடர்வனத்தின் பச்சைப் பட்டு உடுத்தப்பட்டிருக்கிறதோ, அவள் மீது பறந்து செல்லுங்கள். நெருங்கிப் போகாதீர்கள். அவள் தன்னுள் மனிதனற்றவைகளைத் தாலாட்டிக் கொண்டிருப்பாள். மேம்பட்டதொரு வாழ்வினை நோக்கிப் பயணப்பட்டுப் பழகியவள். உங்கள் வாடை அவள் நாசி நிறப்ப அவள் நிம்மதி கெட்டுப் போகும். விலகிப் பறங்கள்.
பிடித்த எழுத்தாளரின் மீதுள்ள பித்துத் தணிய அவன் எழுத்துக்களுக்குள் முகம் புதையுங்கள். அச்சிடப்பட்ட காகிதத்தினை விடத் தனிமையின் துணையொருத்தி கிட்டப் போவதில்லை.
இரவின் தன்மையும், நிலவின் ஆளுமையும் ஒத்த ஒருவன், காதலன், அவனை அல்ல.
அவன் காதலுடன் மட்டும் கலவி கொள்ளுங்கள், போதும்.
ஆடை கலைந்து நிர்வாணப் போர்வையுடுத்துங்கள், முகமூடியில்லா முகத்தின் மிடுக்கைக் காணக் கிடைக்கும்.
கூட்டமாய்ச் செல்ல வனவாசம் எதற்கு? வாழ்வின் சமன் தவறும் பொழுதெல்லாம் தனித்ததொரு வனவாசத்தினைக் கண்டு வாருங்கள்.
இதழ் முத்தத்தினூடும்,
சிந்தை மயக்கும் எழுத்துக்களினூடும்,
மழை வாடை கொண்ட மண்ணின் வாசத்தினூடும்,
பெரிதொரு பேரின்பமாய், ஆரத் தழுவி முத்தமிட்டுக் குதூகலிக்கச் செய்யும் வனவாசத்தினைக் கண்டு வாருங்கள்.
அவளின் தனிமையின் உள்ளேயே காதலித்துக் கிடக்கப் பழகிக் கொள்ளுங்கள். ஏனெனில் மனிதன் தனித்து விடப்பட்டவன்…
❤️
- வெண்ணிலா.




2 comments:

  1. பயங்கரமா இருக்கு அக்கா 🔥🔥🔥🔥🔥🔥🔥💐💯💯💯💯

    ReplyDelete